இன்று தந்தை பெரியாரின் 131 வது பிறந்த நாள்…

16 09 2009

தந்தை பெரியாருக்கு இன்று 131 வது  பிறந்த நாள் , என்னை என் நண்பர் ஒருவர் கேட்டார் ,என்ன பெரியார் பெரியார் என்று பெரிசா பேசுறீங்க  அப்படி என்ன பெரிசா பன்னிட்டாரு அவர் என்று ,

அவருக்கு பெரியாரை தெரியும் அனால் ஆத்திகம் அவரை அப்படி கேட்க வைத்தது ,பதில் சொல்வது பெரியார் பேரனாகிய என் கடமையல்லவா? நான் அவரிடம் கேட்டேன் சமீபத்தில் விமானவிபத்தில் இறந்த ஆந்திர முதல்வர் பேரு என்ன என்றேன்,அவர் உடனே இது என்ன கேள்வி  சிறு பிள்ளைக்கு கூட தெரியுமே ராஜசேகர ரெட்டி என்று என்றார்.    சரி ஆந்திராவின் முன்னாள் முதல்வர் பேரு என்ன என்றேன். உடனே அவர் சந்திரபாபு நாயுடு என்றார்.

evr-with-periyar

சரி நம் தமிழ்நாட்டு முதல்வர் பேரு என்ன என்றேன் ,நண்பருக்கு சற்று எரிச்சல் என்றாலும் பதில் சொன்னார் கருணாநிதி என்றார், சரி முன்னால் முதல்வர் பேரு என்ன என்றேன் ,அவர் ஜெயலலிதா என்றார்.

கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் ஜாதி உண்டு தான் என்றாலும் அந்த பின் இணைப்பு இங்கு இல்லை ஆந்திராவில் இருக்கு .அந்த சாதியை பேருக்கு பின்னால் இருந்து எடுத்தவர் எங்கள் பெரியார் .அந்த அளவில் அவர் பெரியார் தானே என்றேன்.அவரால் மறுப்பு ஏதும் சொல்ல முடியவில்லை.

தமிழ்நாட்டில் இன்றும் முனுசாமி முனுசாமி ரெட்டியாக இல்லாமல்  முனுசாமியாகவும், முத்துபாண்டி முத்து பாண்டி தேவராக இல்லாமல் முதுபாண்டியாகவும் இருக்க பெரியார் தான் காரணம் என்றால் அது மிகை அல்ல ..

அந்த சமூக புரட்ச்சியாளனுக்கு இன்று பிறந்த நாள் –அவரை பற்றி அறிமுகமில்லாதவர்களுக்கு ஓரு சிறு அறிமுகமாக அய்யாவின் வாழ்க்கை வரலாறு கீழே,

பெரியார் எனப் பரவலாக அறியப்படும் ஈ. வெ. ராமசாமி (E. V. Ramasamy, செப்டம்பர் 17, 1879டிசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர்[1]. இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, உயர்சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். இம்மனநிலை வளரக்கராணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையே, அந்த மூடநம்பிக்கைக்கு காரணமாக இருப்பது கடவுள் நம்பிக்கை, கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதை கருத்தில் கொண்டு ஈ.வெ.ரா, தீவிர நாத்திகராக இருந்தார். இந்திய ஆரியர்களால், தென்னிந்தியாவின் பழம்பெருமைவாயந்த திராவிடர்களை பார்ப்பனரால்லாதார் என்ற ஒரு காரணத்தினால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர்களின் வாழ்வுச் சுரண்டப்படுவதையும் பெரியார் எதிர்த்தார். அவர் தமிழ்ச் சமூகத்திற்காக செய்த புரட்சிகரமான செயலகள், மண்டிகிடந்த சாதிய வேறுபாடுகளை குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு பெரியார் குறிப்பிடத் தக்க பங்காற்றியுள்ளார். இவரின் சமுதாயப் பங்களிப்பை பாராட்டி யூனஸ்கோ நிறுவனம் “புத்துலக தொலை நோக்காளர், தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை மூடநம்பிக்கை, அர்த்மற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி” என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது[2] .

இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதை கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பலத் தாக்கங்களை ஏற்படுத்தியவை.

இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ.ராமசாமி நாயக்கர், தந்தை பெரியார் என்ற பெயர்களாலும் அறியப்படுகிறார்.





ராமாயணம்….

30 08 2009

ஆரியர் X திராவிடர் போரே ராமாயணம்

ராமாயணம் நடந்த கதை அல்ல என்பது தெளிவு. அதற்குச் சரித்திரம் இல்லை. அது அறிவுக்குப் பொருத்தமானதாகவோ, ஆராய்ச்சிக்குப் பொருத்தமானதாகவோ இல்லை. தேவர், அசுரர் என்கின்ற பிரிவும், பிறப்பும் இருக்க முடியாது. இந்தப் பிரிவுக்கு எந்த மாதிரியான உருவ, அங்க, மச்ச அடையாளமும் கிடையாது. இவர்களது இருப்பிடத்திற்கும் எந்தவிதமான விளக்கமும் கிடையாது. பூலோகம் என்றும், மேலோகம் என்றும் குறிப்பிட்டிருப்பதற்கு பூகோள சாஸ்திரங்களில் இடம் இல்லை. பூலோகத்திற்கும், மேலோகத்திற்கும் விளக்கம் இல்லை. போக்குவரவுக்கு வழியும் இல்லை!

ராமாயணம் நடந்தது பூலோகத்தில் என்றால், தேவர்கள், ரிஷிகள், பூலோகத்தில் எங்கு இருந்தார்கள்? தேவலோகத்தில் என்றால், அங்கிருந்து பூலோகத்திற்கு எப்படி வந்தார்கள்? ஏன் வந்தார்கள்? எனவே, இப்போது பூதேவர் என்று கூறிக் கொள்ளும் பார்ப்பனர்கள்தான் அக்காலத்தில் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என்கிற பெயர்களை வைத்திருந்தனர். நம் திராவிட மக்களைத்தான் ராட்சதர்கள், அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்திருக்கின்றனர். ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்கும் நடந்த போரை இதன்படி சித்தரிப்பதே ராமாயணம்.

ராமனின் சின்னப்புத்தி: தம்பி வா! நான் சீதையுடன் அனுபவித்ததைக் கேள்! ‘அந்தரங்க மித்திரனான லட்சுமணன் சமீபத்திலிருந்தாலும் விரகதாபம் மேலிட்டு இந்திரிய சுவாதீனமற்று பிரலாபித்தார்’ (பக்கம் 2) காமம் வாட்டுகிறதே ‘சீதையை விட்டுப் பிரிந்து தவிக்கும் என்னைப் பல வித பட்சிகளும் மிருகங்களும் சப்திக்கும் வசந்த காலம் அதிகமாக வாட்டுகிறது’ (பக்கம் 4) இங்கேதான் இன்பம் அனுபவித்தோம். ‘முன்னொரு சமயத்தில் சீதை ஆசிரமத்தில் இருக்கும்பொழுது, இந்தப் பட்சியின் சப்தத்தைக் கேட்டு ஆசை மிகுந்த என்னை அழைத்துப் பலவிதமான இன்பங்களை அனுபவித்தாள். ஆகையால் அவளை விட்டுப் பிரிந்த பிறகே இது இவ்வளவு துக்கத்தைத் தருகிறது’ (பக்கம் 5)

ஆனாலும் அவள் எண்ணங்கள் என்னிடம்தான். ‘சீதையின் மனதும் பிராணனும் எண்ணங்கள் யாவும் என்னிடத்திலேயே வேரூன்றி இருக்கின்றன. சீதையுடன் சேர்ந்திருக்கும் பொழுது எனக்கு மிகுந்த சுகத்தையும் ஆனந்தத்தையும் கொடுத்தது, இந்த காற்றேயல்லவா?’ சீதையிடம் சுகம் கண்டாலொழிய உயிர்வாழேன். ‘அழகுள்ள ஜானகியை அடிக்கடி ஞாபகம் செய்து எனக்கு அவளிடத்தில் உள்ள ஆசையை வளர்க்கின்றன. இந்த பம்பை நதியில் அடிக்கும் சுகமான காற்றை சீதையும் என்னிடத்திலிருந்து அனுபவித்தால் ஒழிய நான் பிழைக்க மாட்டேன்.’

இவ்விதம் ராமன் சீதையின் மீது காமம் கொண்டு கதறுகிறான். அதுவும் யாரிடம்? தன்னுடைய தம்பி லட்சுமணனிடம் கூறுகிறான். இவன் எப்படியெப்படி, எங்கெங்கே சீதையுடன் சேர்ந்து படுத்திருந்தானோ – அதைத் தன் தம்பியிடம் கூறுகிறான். மனிதப் பிறவியில்கூட யாராவது இப்படிக் கூறக் கேட்டிருக்கிறோமா? அதிலும் தன்னுடைய தம்பியிடமே இந்த விஷயங்களைக் கூறுகிறவன் கடவுளின் அவதாரம் என்பதாகக் காண முடியவில்லை. இதனால், பார்ப்பனக் கடவுளர்களின் யோக்கியதை, அவதாரங்களின் அநாகரிகம், பார்ப்பனப் பழக்க வழக்கங்கள் முதலியன விளங்குகின்றன.

ராமன் ஓர் இடத்தில், “நான் அயோத்தியில் இருக்கும்போது ராவணன் சீதையைக் கவர்ந்து சென்றிருந்தால் அக்கறை இல்லை. நானும் சும்மா இருந்திருப்பேன். ஆனால், இங்கு சரியான இடத்தில் அதாவது எப்பொழுதும் கூடி இன்பம் அனுபவிக்கத் தகுந்த யாரும் இல்லாத இந்த இடத்தில், நான் சீதையுடன் எப்பொழுதும் சுகம் அனுபவிக்க ஆசை கொண்டிருந்த சமயம் பார்த்துக் கவர்ந்து கொண்டு போய்விட்டானே” என்ற கருத்தில் துக்கப்படுகிறான்.

ஆகவே, ராவணன் சீதையை அயோத்தியிலேயே தூக்கிச் சென்றிருந்தால் ராமன் சும்மா இருந்திருப்பான் என்றும் தெரிகிறது! மேலும், ராமன் காட்டுக்கு வந்தது சீதையுடன் சதாகாலமும் சேர்ந்து இன்பம் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே வந்திருப்பான் என்றும் தெரிகிறது. இப்படிக் கடவுள் அவதாரத்தைப் பார்ப்பனர்கள் கொஞ்சமும் அறிவில்லாத முறையில் சித்தரித்து எழுதுவதால், கடவுளுக்கும் கடவுள் அவதாரம் என்பதற்கும் எந்த அளவில் பெருமையைக் கொடுப்பதாக இருக்கிறதென்பதைச் சிந்தியுங்கள்.

மேலும், இப்படி அவன் பிதற்றும்பொழுது தன்னை அறியாமலே தன்னை ‘அலி’ என்பதையும் ஓர் இடத்தில் ஒப்புக் கொள்ளுகிறான். ஆரண்யகாண்டம் 64ஆவது சர்க்கத்தில் ராமன் கூறுகிறான், ‘என்னை வீரியமற்றவன், கையாலாகாதவன் என்று அவமதிக்கிறார்கள்’ என்று பிறர் தன்னைப் பேடி என்று கூறுகிறார்களே என்று வருத்தமுறுகிறான். இப்படி ராமன் தன்னைப் பேடி என்று மக்கள் உணர்ந்துவிட்டார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு, அதை எப்படியும் மறைக்க வேண்டும் என்பதற்காக ஆண்மையுள்ளவன் போல் பிதற்றுகிறான். எனவே, ராமன் பேடி என்பதில் அய்யமில்லை.

(அனைத்து ஆதாரங்களையும் கொண்டு தொகுக்கப்பட்ட – ‘ராமாயணக் குறிப்புகள்’ நூலிலிருந்து)







பெண்களை அடிமைகளாக்க..

29 08 2009

பெண்களை அடிமைகளாகவே இருக்க வலியுறுத்தும் புலவர்கள்

மனிதன் ஆக்க வேலைக்குப் பயன்பட வேண்டியவன். மனிதன் பகுத்தறிவு பெற்றிருப்பது, உலகிலுள்ள மனித சமுதாயத்தின் ஆக்கத்திற்குப் பாடுபடவேயாகும். ஆக்க வேலையென்றால் பண்பட்ட நிலமாக இருந்தால் அதனைப் பயன்படுத்தி வாழலாம். ஆனால், முள்ளும் புதரும் நிறைந்த காடு போன்ற நிலத்தில் உள்ள முட்கள், புதர்களை ஒழித்து நிலத்தைப் பண்படுத்தி, அதன்பின் பயன்படுத்த வேண்டி இருக்கின்றது. அதுபோன்று நம் மனிதர்கள் மனதில் நிறைந்திருக்கின்ற முட்டாள்தனம், மூடநம்பிக்கை, மடமை, அறிவற்றத் தன்மை ஆகிய முட்களையும், புதர்களையும் அழித்து ஒழித்துப் பண்படுத்தி மனிதனை அறிவுப் பாதையில் செலுத்த வேண்டியவர்களாக இருப்பதால் இப்போது நாம் மனிதனிடமிருக்கும் மடமை, முட்டாள்தனம், மூட நம்பிக்கைகளை அழிக்கும் அழிவு வேலையில் ஈடுபட்டிருக்கிறோம்.

ஒருவன் தனக்கிருக்கிற பழைய காரை வீட்டை மாற்றி, வில்லை வீடாக்க வேண்டுமானால், பழைய வீட்டை இடித்து ஒழித்துவிட்டு அஸ்திவாரத்தையே மாற்றியமைக்க வேண்டும். இதைச் செய்யாமல் மாடி வீடு கட்டுவது என்பது இயலாது என்பதோடு, கூரை வீட்டிலுள்ள சாமான்கள் எதுவும் மாடி வீட்டிற்குப் பயன்படுத்த முடியாது. அதுபோன்ற கூரை வீட்டை அழித்து மாடி வீடு கட்டும் காரியத்தில் தான் நாம் இறங்கி இருக்கின்றோம். மனிதனின் அறிவுக் கேட்டுக்கு, வளர்ச்சிக் கேட்டிற்குக் காரணமான பழமையை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றோம். ஆனதால் நம்மிடமிருக்கின்ற பழமைகள் அத்தனையையும் மாற்றியமைப்பதில் ஒன்றாகத்தான் இத்திருமண முறையையும் மாற்றியமைத்திருக்கின்றோம்.

பொதுவாக ஒரு ஜீவன், தன் உணர்ச்சிக்காகவும் இனவிருத்திக்காகவும் ஒன்றோடு ஒன்று கூடியதே ஒழிய, இரண்டும் கூடி வாழ்ந்தது என்பது கிடையாது. மனிதனும் முன்பு அப்படித்தான் வாழ்ந்திருக்கின்றான். கணவன் மனைவியாகக் கூடி வாழ்ந்தார்கள் என்று சொல்ல முடியாது. இச்சைப்பட்ட போது ஒருவருடன் ஒருவர் கூடி பிரிந்தார்களே ஒழிய, குடும்பம், இல்லறம், கணவன், மனைவி என்று வாழ்ந்தார்கள் என்பது கிடையாது. இவையெல்லாம் இடைக்காலத்தில் அதுவும் மற்றவர்களால் நம்மிடையே புகுத்தப்பட்டவையே ஆகும்.

கல்யாணம் ஆனால் அதோடு பெண்களின் தனி உரிமை (இண்டிவிஜுவலிசம்) ஒழிக்கப்பட்டு விடுகின்றது. ஒருவன் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டால், அவள் சாகிற வரை அவனோடேயே வாழ்ந்து தீர வேண்டுமென்றிருக்கின்றது. இடைக் காலத்தில் தான் அதுவும் தங்களை உயர்ந்த ஜாதி என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களிடையே ஒருவன் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டால், அவள் தன் உயிர் போகிறவரை அவனுடன் இருந்து தீர வேண்டும். கணவன் அவளுக்கு முன் இறந்து விட்டால், கடைசி வரை விதவையாக வேறு எவனையும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டியது என்பது முறையாகிவிட்டது. இப்படிப் பெண்கள் சமுதாயத்தை எதற்கும் பயன்படாமல், தங்களின் அடிமைகளாக
உரிமைப் பொருளாக ஆக்கிக் கொண்டு விட்டனர்.

நம் புலவர்கள் என்பவர்கள் மூட நம்பிக்கையைப் பரப்புகின்றவர்களாக இருக்கின்றார்களே தவிர, புதுமையைப் பரப்பக் கூடியவர்களாக இல்லை. நம் புலவர்கள் எல்லாம் குறையில்லாமல் ஏற்றுக் கொள்ளக்கூடிய பெரும் அறிவாளி புலவர் வள்ளுவர். அவர் முதற்கொண்டு அத்தனைப் புலவர்களும் பெண்கள் அடிமையாக இருக்க வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்துகின்றவர்களாக இருக்கின்றார்களே ஒழிய, ஒருவன் கூட பெண்கள் உரிமையோடு, சுதந்திரத்தோடு, சமத்துவத்தோடு வாழ வேண்டுமென்று சொல்லவில்லை. இந்த வள்ளுவர் தான் பெண் தன் கணவனைத் தொழ வேண்டுமென்று சொல்லியிருக்கின்றார். வள்ளுவன் பெண்களைத் தான் கற்போடிருக்க வேண்டுமென்று சொன்னாரே தவிர, ஆண்கள் இப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று சொல்லவில்லை என்று ஒரு திருமணத்தில் இதுபோன்று குறிப்பிட்டேன்.

அந்தத் திருமணத்தில் திருக்குறள் முனுசாமி அவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். நான் அவரிடம், “சொன்னது தவறாகக் கூட இருக்கலாம். வள்ளுவர் ஆண்கள் கற்போடு இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டினால், நான் எனது தவறை மாற்றிக் கொள்கிறேன்” என்று சொன்னேன். அதற்கு அவர் “திருக்குறளிலிருந்து “பிறன் இல்விழையாமை” என்ற அதிகாரத்தைக் காட்டி, “வள்ளுவர் ஆண்களுக்கும் அறிவுரை கூறி இருக்கிறார்” என்று சொன்னார். நான் உடனே, “பிறன் மனைவியிடம் போக வேண்டாமென்று சொன்னாரே ஒழிய, கல்யாணம் ஆகாத பெண்களிடமோ, கணவன் இல்லாத பெண்களிடமோ போகக்கூடாது என்று சொல்லவில்லையே. கல்யாணம் ஆன பெண் இன்னொருவனுடைய சொத்து என்பதால், பிறர் சொத்தைத் திருடக் கூடாது என்று சொல்லியிருக்கிறாரே தவிர, மற்றப்படி பெண்களுக்குச் சொன்னது போல எந்த ஆணிடமும் செல்லக்கூடாது என்று சொல்லவில்லையே” என்று சொன்னதும் அவரால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

18.5.1969 அன்று இரும்புலிக்குறிச்சியில் நடைபெற்ற திருமணத்தில் ஆற்றிய உரை





ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை..

29 08 2009

இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை

இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் என்ன? இதுதான் எனக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு. தங்களுடைய நாடு ஏற்கனவே ஒரு ஜனநாயக நாடாகத்தான் இருக்கிறது என்று பெரும்பாலான இந்தியர்கள் மிகவும் பெருமையாகப் பேசுகின்றனர். வெளிநாட்டினர்கூட, இந்தியாவுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் விருந்துகளில் மாபெரும் இந்தியப் பிரதமர் பற்றியும், மாபெரும் இந்திய ஜனநாயகம் பற்றியும் பேசுகின்றனர்.

குடியரசு (Republic) இருந்தால், அங்கு ஜனநாயகம் (Democracy) தழைத்தோங்கும் என்றொரு முடிவுக்கு எல்லோரும் வந்து விடுகின்றனர் என்பது இதன் மூலம் விளங்குகிறது. மேலும், வயது வந்தவர்கள் வாக்களிப்பதன் முலம் உருவாக்கப்படும் நாடாளுமன்றத்தில், சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநதிகள், சில சட்டங்களை உருவாக்குவதன் மூலம் அங்கு ஜனநாயகம் தழைத்தோங்குவதாகக் கருதப்படுகிறது. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், ஜனநாயகம் என்பது அரசியல் சார்ந்த ஒன்றாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.

இந்தியாவில் ஜனநாயகம் இருக்கிறதா? அல்லது ஜனநாயகம் இந்தியாவில் இல்லையா? உண்மை நிலை என்ன? ஜனநாயகத்தை குடியரசுடனும், நாடாளுமன்ற அரசாங்கத்துடனும் இணைத்துப் பார்ப்பதால் ஏற்படும் குழப்பத்தை நீக்கும்வரை, இதற்கு சரியான பதிலை அளிக்க முடியாது. குடியரசு மற்றும் நாடாளுமன்ற அரசாங்கம் ஆகியவற்றிலிருந்து ஜனநாயகம் முற்றிலும் வேறுபட்டது. ஜனநாயகத்தின் வேர், அரசாங்கத்திலோ, நாடாளுமன்றத்திலோ அல்லது இவை போன்ற வேறு எந்த அமைப்பிலோ நிலைப்பெற்றிருக்கவில்லை. ஜனநாயகம் அரசாங்கத்தைவிட மேலானது. அது, ஒன்றிணைந்து வாழ்வதை அடிப்படையாகக் கொண்டது. ஒருங்கிணைந்த வாழ்க்கையை மேற்கொள்ளும் மக்களே ஒரு சமூகத்தை உருவாக்குகின்றனர். இத்தகைய சமூக உறவு முறைகளில்தான் ஜனநாயகத்தின் வேர்கள் கண்டெடுக்கப்பட வேண்டும்.

“சமூகம்’ என்ற சொல் எதைக் குறிக்கிறது? சுருக்கமாகச் சொல்ல வேண்டும் எனில், “சமூகம்’ இயற்கையாகவே தோன்றியதாக நாம் நினைக்கிறோம். சமூக ஒற்றுமையை முன்னெடுக்கும் தன்மைகள் பெருமைபடத்தக்கவையாகும். இது, சமூக நோக்குடனும், தொண்டு மனப்பான்மையுடனும், பொது வாழ்வில் நேர்மையுடனும், ஒருவருக்கொருவர் இரக்கத்துடனும், ஒத்துழைப்புடனும் வாழும் தன்மைகளைக் கொண்டதாகும்.

இத்தகைய சிறப்புத் தன்மைகள் இந்திய சமூகத்தில் காணப்படுகின்றனவா? இந்திய சமூகம் தனிமனிதர்களைக் கொண்டிருக்கவில்லை. இது, எண்ணற்ற சாதிகளின் தொகுப்பை உள்ளடக்கியதாக இருக்கிறது. இது, இந்திய சமுகத்திற்கு மட்டுமே உள்ள தனித்தன்மையான வாழ்வியல் முறையாகும். எனவேதான், இங்கு ஒருவருக்கொருவர் தங்களுடைய அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ள மறுக்கின்றனர்; மற்றவர்களுக்கு இரங்கும் தன்மையும் இல்லை. உண்மை நிலை இவ்வாறிருக்க, இது குறித்து விவாதிப்பது தேவையற்றது. சாதி அமைப்பு நிலைத்து நீடித்திருப்பது, அச்சமூகத்தின் குறிக்கோளை மறுப்பதாகவும், அந்த வகையில் அது ஜனநாயகத்தையே மறுப்பதாகவும் அமைந்து விடுகிறது.

இந்திய சமூகம், சாதி அமைப்புடன் பின்னிப் பிணைந்துள்ளது. எனவே, சாதி அடிப்படையில்தான் எல்லாமே ஒருங்கிணைக்கப்படுகிறது. இந்திய சமூகத்திற்குள் நுழைந்தால், நீங்கள் மிக வெளிப்படையாக சாதியைக் காண முடியும். ஒரு ஆண் அல்லது ஒரு பெண், ஒரு சாதியை சார்ந்தவர்களாக இல்லை என்ற சாதாரண காரணத்திற்காக ஒரு இந்தியன் மற்றொரு இந்தியனுடன் உண்ணவோ, திருமணம் செய்த கொள்ளவோ முடியாது. இதே காரணத்திற்காக, ஒரு இந்தியன் மற்றொரு இந்தியனைத் தொட முடியாது. அரசியலுக்குச் சென்று அதில் இணைந்து செயல்பட்டுப் பாருங்கள்; அங்கும் சாதி எதிரொலிப்பதை நீங்கள் பார்க்க முடியும்.

தேர்தலில் ஒரு இந்தியன் எப்படி வாக்களிக்கிறான்? ஒரு இந்தியன் தன் சாதியைச் சேர்ந்த வேட்பாளருக்கே வாக்களிப்பான். வேறு யாருக்கும் அவன் வாக்களிக்க மாட்டான். இந்தியாவில் வேறு எந்த அரசியல் கட்சியும் செய்யாத அளவுக்கு இந்திய காங்கிரஸ் கட்சி, தேர்தல் நலன்களுக்காக சாதி அமைப்பைப் பயன்படுத்திக் கொள்கிறது. அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலைப் பார்த்தால் இது நன்கு விளங்கும். ஒவ்வொரு தொகுதியிலும் எந்த சாதியினர் அதிக எண்ணிக்கையில் வசிக்கிறார்களோ, அந்த சாதியைச் சார்ந்திருப்பவரே அந்தத் தொகுதியின் வேட்பாளராக இருப்பதைக் காண முடியும். காங்கிரஸ் கட்சி சாதி அமைப்புக்கு எதிராகக் குரல் கொடுப்பதாக ஒரு தோற்றம் இருந்தாலும், அது உண்மையில் சாதி அமைப்பை ஆதரிக்கவே செய்கிறது.

தொழிற்சாலைகளுக்குச் சென்று பாருங்கள். ஒரு தொழிற்சாலையில் உயரிய பதவியில் அதிகளவு சம்பளம் பெறுபவர், அந்த தொழிற்சாலையின் உரிமையாளருடைய சாதியைச் சார்ந்தவராகவே இருப்பார் என்பதை நீங்கள் கண்டறிவீர்கள். குறைந்தளவு சம்பளம் பெறும் கடைநிலைப் பணிகளில் மட்டுமே பிற சாதியை சார்ந்தவர்களைக் காண முடியும். வணிகத் துறைக்குச் சென்றாலும் இதே நிலையைக் காணலாம். ஒட்டு மொத்த வணிகத் துறையும் ஒரேயொரு சாதியின் காமாக அமைந்திருக்கிறது. வேறு எவருக்கும் இங்கு அனுமதி இல்லை.

‘வாய்ஸ் ஆப் அமெரிக்கா’ 20.5.1956′ டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல்
தொகுப்பு’ : 17 பக்கம் : 519





நாம் இந்துக்கள் அல்ல….

29 08 2009

.
திராவிடர்களாகிய நாம் இந்துக்கள் அல்ல என்று பிரகடனப்படுத்த வேண்டும்

இந்நாட்டில் அநேகக் கட்சிகளிருக்கின்றன. கட்சி என்பது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற பல திட்டங்களை வகுத்துக் கொண்டு, அதை மக்களிடம் சென்று கூறி, ஓட்டு கேட்டு மந்திரிகளாவதும், பட்டம், பதவிகள் தேடுவதுமாகும். திராவிடர் கழகம் அவ்விதமான அரசியல் கட்சிகளை சேர்ந்ததல்ல. அது ஓர் இயக்கமாகும். இயக்கமென்பது குறிப்பிட்ட அதிகாரத்துக்கோ, பட்டம் பதவிகளுக்கோ மட்டும் பணியாற்றுவதென்பது இல்லாமல், மக்களிடையே சென்று பயனுள்ள காரியங்களை எடுத்துக்கூறி, அவர்களின் நல்வாழ்வுக்கு அடிகோலுவதும், அந்த நிலைக்கு மக்களிடம் மனமாற்றமடையும் வகையில் பிரச்சாரம் செய்வதுமாகும்

மந்திரிகளாவதோ, பட்டம் பதவி பெறுவதோ என்ற கொள்கை மட்டுமிருப்பவர்கள் மக்களுக்கு சீக்கிரத்தில் நல்லவர்களாகிவிடலாம்; தேசபக்தர்களாக, தீரர்களாக, தியாகிகளாக ஆகிவிடக்கூடும். ஏனெனில், மக்களை அந்த சந்தர்ப்பத்தில் அதாவது, ஓட்டு வாங்கும் நேரத்தில் என்ன கூறினால் உற்சாகமடைந்து நம்பிவிடுவார்களோ, அவைகளை வாய் கூசாது பிரமாதமாக உறுதி கூறிவிட்டு, பின்னர் பதவியில் போய் அமர்ந்தவுடன் தாங்கள் கொடுத்த வாக்குறுதியில் ஒரு சிறிது கூட நடைமுறையில் செயலாற்ற முடியாமைக்குக் கொஞ்சமேனும் வெட்கமோ, நாணமோ கொள்ளாமல் பதவி மோகத்திலேயே உழன்று கிடப்பார்கள்..

ஆனால், இயக்கம் என்று சொல்லக்கூடிய தன்மையிலுள்ள நாங்கள் அதாவது திராவிடர் கழகத்தார், மக்களிடம் குடிகொண்டுள்ள மேற்கண்ட மடமைகளை ஒழிக்க, மனதில் ஒன்றும் மறைத்து வைக்காமல், வெளிப்படையாக நாங்கள் மனதில் எண்ணுவதைக் கூறி வருகிறோம். இதனால் மக்களின் முன்னிலையிலே நாங்கள் விரோதிகளாக, தேசத்துரோகிகளாக, கடவுள் துரோகிகளாகக் கருதப்பட்டு, கற்பிக்கப்பட்டு வருகிறோம். எந்த மக்கள் சமுதாயம் மனிதத் தன்மையடைய வேண்டுமென்று கருதி உழைக்கிறோமோ, அதே மக்கள் எங்களைத் தவறாகக் கருதுமாறு, சில வஞ்சகர்களால் கற்பிக்கப்பட்டு வந்திருக்கிறோம்.

திராவிட இயக்கமும் ஓர் அரசியல் கட்சியாக வேலை செய்திருந்து மந்திரிப் பதவிகளில் அமர்ந்திருந்தால் கூட, இன்றைய நிலையில், மக்களுக்கு ஒரு சிறு நன்மையும் பயக்க முடியாது. அஸ்திவாரமில்லாத கட்டடம் எப்படி சரிந்து விழுந்து விடுமோ, அதே போன்று மக்கள் சமுதாயத்திலே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வேரூன்றி வளர்ந்து வந்துள்ள மடமைகளை, பகுத்தறிவற்ற தன்மையை, மூடப்பழக்க வழக்கங்களை, வைதிக மனப்பான்மையை, ஜாதி, மத வெறியை அறவே ஒழித்து, அனைவரையும் அறிவுள்ளவர்களாக ஆக்காத வரையில் எப்பேர்ப்பட்ட ஆட்சியிருப்பினும், அது நீடித்து இருக்க முடியாது. நாட்டிலும் அமைதி நிலவ முடியாது. ஏன்? அமைதியில்லாவிடத்தில் அறிவு நிலைத்திருக்க முடியாதல்லவா?

மக்கள் சமுதாயத்திலே யார் யார் தாழ்ந்திருக்கின்றனரோ, அத்தனை பேருக்கும் பாடுபடுவதுதான் கழகக் கொள்கையேயன்றி, சர்க்காருடன் போட்டிப் போட்டு ஓட்டு வேட்டையாடுவது கழகக் கொள்கையல்ல. நான் இதை கட்சித் தலைவன் என்ற முறையில் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்திக் கூறி வந்துங்கூட, சிலர் வேண்டுமென்றே எங்கள் மீது தவறான எண்ணத்தை, பொய்யுரைகளைக் கூறிவருகின்றனர். நாங்கள் பாடுபடுவதெல்லாம் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவென்றும், அரசியல் ஆதிக்கம் பெறவே திராவிடர் கழகம் பாடுபடுகிறதென்றும் கூறி வருகின்றனர். இப்பேர்ப்பட்ட பித்தலாட்டக்காரர்களின் போக்கைக் கண்டு பரிதாபப்படுவதைத் தவிர வேறென்னதான் செய்வது?

சுயராஜ்யம் வந்த பின்னால்கூட பார்ப்பனர், பறையன், சூத்திரன், மேல் ஜாதி என்பவைமேலும் மேலும் வளர்க்கப்படுவதா? எனவே நம் மக்கள் இன்ப வாழ்வு பெற வேண்டுமானால், மக்களை முதலில் மனிதத்தன்மை உள்ளவர்களாகச் செய்ய வேண்டும். அதற்கு வேண்டுவது நம்மைப் பிடித்துள்ள மடமைகள், சாஸ்திரங்கள், கடவுள் பேரால் சுரண்டும் தன்மைகள், புராணங்கள், வர்ணாசிரம வைதிகக் கொடுமைகள், ஜாதி மத வெறிகள் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும்.

அன்பர்களே! இக்காரியங்களில் நாம் வெற்றி பெற அதிக விலை கொடுக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். ஏனெனில், நமது எதிரிகள் இன்று மிகுந்த செல்வாக்குப் பெற்றவர்களாக இருக்கிறார்கள். அந்த அதிக விலை என்பது என்ன? திராவிடர்களாகிய நாம் இந்துக்கள் அல்ல என்று பகிரங்கமாகப் பிரகடனம் செய்ய வேண்டுவதேயாகும். இந்து மதம்தான் ஜாதி, மதப் பிரிவுகளை, வர்ணாசிரமத்தை வலியுறுத்தி நிற்கச் செய்கிறது. அதன் பேராலுள்ள ஆதாரங்களுக்கும் நமக்கும் இருந்து வரும் தொடர்பு அறவே அகற்றப்பட வேண்டும். இவை ஒழிந்த பின்னரே, மக்கள் சமுதாயத்தில் மறுமலர்ச்சி என்னும் பகுத்தறிவு உதயமாகும். நல்லாட்சியும் நிறுவ முடியும்.

3.4.1949 அன்று விருதுநகரில் ஆற்றிய உரை








Follow

Get every new post delivered to your Inbox.